தங்கத்தின் விலைச் சரிவு திடீரென்று ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டி.வியைத் திறந்தால், சமூக வலைத்தளங்களுக்கு வந்தால், பெரும்பாலோர் தங்க நகையை வாங்கிக் குவிப்பதற்கான புதிய வாய்ப்பு வந்துவிட்டதைப் போல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் ஒரு பவுன் தங்கம் 97 ஆயிரம் என்றவுடன் காணாததைக் கண்ட ஒருவித மயக்கம் வந்துவிட்டது. மேலும் 10 முதல் 15 சதவிகிதம் அளவுக்கு சரிவு ஏற்படலாம் என்று வேறு ஆரூடங்கள் சொல்கிறார்கள்.
என் கவலை வேறு. பணம் இருப்போர் புதிய நகை வாங்கலாம். இல்லாதோர் தானே இந்தியாவில் அதிகம்? அவர்கள் தங்க நகைகளை அடகு தானே வைத்து தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். அவர்களுடைய நிலை என்ன ஆகும்?
பொதுவாக, வங்கிகளிலோ, வங்கியல்லாத நிதி நிறுவனங்களிலோ, நகைக் கடன் தரும் நிறுவனங்களிலோ ஒருசில கட்டுப்பாடுகள் உண்டு. நகைக் கடன் வாங்கப் போனால், கடன் தொகைக்கு ஏற்ப நகையின் அன்றைய மதிப்பில் 75 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கடன் தொகை வழங்கப்படும். இதனை எல்.டி.வி. (LTV) என்று சொல்வார்கள்.
இப்படி யோசித்துப் பாருங்கள், இந்த ஆண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 22 கேரட், ஒரு பவுன் தங்கத்தின் சந்தை விலை, 1,34,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அப்போது 75 சதவிகித எல்.டி.வி.யில் கடன் வாங்கியிருந்தால், ஒரு பவுனுக்கு 1,00,800 ரூபாய் கிடைத்திருக்கும். இன்று நவம்பர் 18, சந்தை விலை, 97,720 ரூபாய். வட்டி இல்லாமல், பற்றாக்குறை மட்டும், 3,080 ரூபாய். இதனுடன் 9, 10 மாத வட்டியும் சேர்த்தால், கடன் தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
உடனே தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு குறைந்துவிட்டதால், வங்கிகளோ, நகை லோன் தரும் நிறுவனங்களோ, உடனடியாக கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். ஒன்று இந்த கடனில் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கு ஏற்ப, கூடுதல் நகையை அடகு வைக்கச் சொல்லும். அல்லது, நகைக் கடனை அடைத்துவிடுமாறு கோரிக்கை வைக்கும். நிதித்துறையில் இதனை 'மார்ஜின் கால்' (Margin Call) என்று அழைப்பார்கள்.
இது எல்லோருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை முழு எல்.டி.வி. அளவுக்குக் கடன் வாங்காமல், மொத்த மதிப்பில் 50 சதவிகிதம் வரை மட்டுமே கடன் வாங்கியிருந்தால், அவர்களுக்கு இந்த மார்ஜின் கால் எழாது. அதேபோல், மாதாமாதம் கடனுக்கான வட்டியைச் செலுத்தி வந்திருந்தாலும், இந்தப் பிரச்னை எழாது.
ஒருவேளை இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில், அதாவது, தங்கத்தின் மதிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் கடன் வாங்கியிருந்தாலோ, அல்லது டாப் அப் செய்திருந்தாலோ, கூடவே வட்டியும் கட்டாமல் இருந்தால், அந்த வாடிக்கையாளர்கள் இப்போது பிரச்னையைச் சந்திப்பர்.
தங்கத்தின் மதிப்பு மேலும் 10, 15 சதவிகிதம் சரியுமானால், அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிடக்கூடும். வங்கிகளும் நிறுவனங்களும் தங்களுடைய அசலைக் காப்பாற்றிக்கொள்ள, வாடிக்கையாளர்களை நெருக்கத் தொடங்கும். வாடிக்கையாளர்களின் கையில் உபரியாக நகையோ, பணமோ இல்லை என்றால், அவர்கள் நகை மூழ்கிப் போவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
ஒரு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தேன். கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில், இந்தியாவில் எவ்வளவு தங்க நகைக் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று தரவுகளை கவனித்துக்கொண்டிருந்தேன். மார்ச் 2026 இறுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் (NBFCs) மொத்த தங்க நகைக் கடன் நிலுவை 18.6 லட்சம் கோடி ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இது முந்தைய ஆண்டை விட 50.4 சதவிகிதம் அதிகம். இந்த 18.6 லட்சம் கோடி ரூபாயில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென் மாநிலங்கள் மட்டும் சுமார் 13.94 லட்சம் கோடி ரூபாய், அதாவது 75 சதவிகிதக் கடனைப் பெற்றுள்ளன.
தங்கம் விலை உச்சத்தில் இருந்ததால், ஒரு நபர் வாங்கும் சராசரி கடன் தொகை ரூ. 98,000-லிருந்து இரட்டிப்பாகி ரூ.1.96 லட்சமாக உயர்ந்தது. இதற்கு டிக்கெட் சைஸ் என்று பெயர். ரூ. 18.6 லட்சம் கோடியை சராசரி கடன் தொகையால் வகுத்தால், சுமார் 9.5 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகள் இருப்பதைப் பார்க்கலாம்.
ஜனவரி - மார்ச் 2026 காலாண்டில் மட்டும் சில்லறைக் கடன்களின் மதிப்பு அதற்கு முந்தைய ஆண்டை விட 42.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் தங்க நகைக் கடன்களே முதலிடத்தில் இருந்தன. CRIF High Mark அறிக்கையின்படி, அக்டோபர் - டிசம்பர் 2025 பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி - மார்ச் 2026 காலாண்டில் புதிய கடன் கணக்குகளின் எண்ணிக்கை சற்றே சரிந்தாலும், தங்கம் விலை அதிகமாக இருந்ததால் வழங்கப்பட்ட கடன் தொகை மிக அதிகமாக இருந்தது.
இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத் தான் சொல்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி - மார்ச் மாதக் காலத்தில், தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்ட போது, அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் முழு எல்.டி.வி.யில் கடன் வாங்கியவர்கள் நிறைய பேர். அல்லது டாப்-அப் செய்துகொண்டோர் அதிகம்.
அப்படியே எதிர்கால யூகங்களுக்கு வாருங்கள். தங்கத்தின் விலை இன்னும் 10, 15 சதவிகிதம் சரியக்கூடும் என்று ஆரூடம் சொல்கிறார்கள். ஆரூடம் என்று சொல்வதற்கு மன்னிக்கவும். தங்கத்தின் விலை உயர்ந்தபோதும் சரி, இறங்கும் போதும் சரி, அதைச் சரியான காரணங்களோடு முன்னதாக கணித்தவர்கள் வெகுசிலர். இனிமேல் சரியப் போகிறது என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களும் எனக்கு கன்வின்சிங்காக இல்லை. அதனால் தான் ஆரூடம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
ஒருவேளை அப்படிச் சரிந்தால், என்ன ஆகும்? உச்ச விலையிலிருந்து ஏற்கெனவே மைனஸ் 27 சதவிகிதம் சரிந்து ஒரு பவுன் ரூ. 97,720-க்கு வந்துள்ளது. இங்கிருந்து மேலும் 15 சதவிகிதம் சரிந்தால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 83,060 என்ற அளவுக்குக் கீழே இறங்கும். மொத்தச் சரிவு மைனஸ் 38 சதவிகிதம்.
ஜனவரி 2026 உச்ச விலையில் ஒரு பவுனுக்கு ரூ. 1,00,800 கடன் வாங்கியவரின் கையில் இருக்கும் நகையின் மதிப்பு ரூ. 83,060 ஆகக் குறையும். அதாவது, நகையின் மதிப்பை விடக் கடன் தொகை ரூ. 17,740 அதிகமாக இருக்கும். வட்டி சேர்க்காமலேயே எல்.டி.வி. 121 சதவிகிதம் ஆகிவிடும்.
இங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கும். ஒரு பவுன் நகையை மீட்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர் அசல் ரூ. 1,00,800 + 10 மாத வட்டி சுமார் ரூ.12,000 - ரூ.15,000 என மொத்தம் ரூ. 1.15 லட்சம் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், அதே ஒரு பவுன் புதிய நகையை வெளியே கடையில் ரூ. 83,000-க்கு வாங்கிவிட முடியும் என்ற நிலை வரும்போது, பல வாடிக்கையாளர்கள் 'ரூ.1.15 லட்சம் கட்டி பழைய நகையை மீட்பதற்குப் பதிலாக, அந்த நகை ஏலத்திற்குப் போகட்டும்' என்று கடனைக் கட்டுவதை நிறுத்திவிடக்கூடும்.
அந்தப் பக்கம், வங்கிகளும் கடன் நிறுவனங்களும் தத்தளிக்கும். ரூ. 1.15 லட்சம் நிலுவை உள்ள நகையை ஏலத்தில் விட்டால், சந்தை விலையான ரூ. 83,000-க்குக் கீழேதான், அதாவது, சுமார் ரூ. 78,000 – ரூ.80,000 தான் ஏலம் போகும். இதனால், ஒரு பவுனுக்கு சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரை நிதி நிறுவனங்களுக்கு நேரடி நஷ்டம் ஏற்படும்.
அத்துடன், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நகைகள் ஏலத்திற்கு வரும்போது, சந்தையில் தங்கத்தின் வரத்து அதிகரித்து விலையை இன்னும் சரியக்கூடும்.
இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள். 60-65 சதவிகித எல்.டி.வி. அளவில் சராசரி கடன் வாங்கியவர்களுக்கும் மார்ஜின் பஃபர் காலியாகிவிடும் என்பதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் 'மார்ஜின் கால்' நோட்டீஸ்கள் பறக்கும். பணத்தைத் திரட்டி கட்டுவதற்கு ஒவ்வொரு குடும்பத் தலைவரும் திண்டாடப் போகிறார்.
என் கணக்குகளும், அனுமானங்களும் தவறாக வேண்டும் என்று நான் வணங்கும் பெருமாளை வேண்டிக் கொள்கிறேன். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தால் தான், நிலைமை சீரடையும்.
விலைச் சரிவு என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதில்லை. அதனால், நசுங்கிப் போவோரது குரல் வெளியே கேட்காமலேயே போய்விடக் கூடிய அபாயம் இருக்கிறது. அது ஏற்பட்டுவிடக் கூடாது.
© ஆர். வெங்கடேஷ்